திருமுருகாற்றுப்படை · 4/6திரு ஏரகம் (சுவாமிமலை)
Thiru Eragam (SwAmimalai)
இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர் உடீஇ
உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரைஉறு நறுமலர் ஏந்தி பெரிதுஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன், அதான்று
பத உரை · word meanings
- இருமூன்று எய்திய இயல்பு
'ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல்'. ஆகிய அறுவகைப் பணிகளை நிறைவேற்றும் பண்பு - இருவர்ச்சுட்டிய
தாயும், தந்தையும் ஆகிய இருவரின் குலத்தின், அல்லது குடும்பத்தின் நற்பெயரைப் புகழ்ந்து கூறிய - அறு-நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
6x4 + 6x4 = 48 ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலம் - முத்தீ
'ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம்' என்னும் மூவகை வேள்வித் தீ - இருபிறப்பாளர்
இயற்கைப் பிறப்பு, அறிவு முதிர்ச்சியின் பின்னர் எய்தும் மறு பிறப்பு ஆகிய இரு பிறப்புகளுக்குரிய அந்தணர்கள் - பொழுது அறிந்து நுவல
நல்ல நேரத்தை கணித்துத் தெரிவிக்க - ஒன்பதுகொண்ட மூன்று புரி நுண்ஞாண்
[ஒவ்வொரு புரியிலும் மூன்று இழைகளைக்கொண்ட] மூன்று புரிகளாலாகிய ஒன்பது இழைகளைக்கொண்ட பூணூல் - புலராக் காழகம் புலர உடீஇ
உலராத ஆடையை உலரும்படி உடுத்தி - உச்சிக்கூப்பிய கையினர்
தலை உச்சி மீது இரு கைகளையும் குவித்து வணங்குபவர்கள் - ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
'சரவணபவ', அல்லது 'குமாராயநம' என்னும் ஆறு எழுத்துகள் அடங்கிய மந்திரம் - 'விரைவுறு நறுமலர் ஏந்தி
நறுமணம் உடைய மலர்களைத் தூவி - பெரிது உவந்து
மிகவும் மகிழ்ந்து - ஏரகத்து உறைதலும் உரியன்
திரு ஏரகத்தில் அமர்ந்திருக்கும் உரிமையுடைய திருமுருகப்பெருமான்



