திருமுருகாற்றுப்படை · 5/6குன்றுதோறாடல்

KundruthOrAdal

பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன்
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரல்உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலையுடை நறும்பூ
செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு
சுரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம்
கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்
நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுஉறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து
குன்றுதொறு ஆடலும்நின்ற தன்பண்பே, அதான்று

பத உரை · word meanings

  • பைங்கொடி
    பசுமையான கொடி
  • நறைக்காய்
    நறுமணம் உடைய சாதிக்காய்
  • இடை இடுபு
    நடுவில் இட்டு
  • வேலன்
    [திருமுருகனைப் போல] கையில் வேலை உடையவன்
  • அம்பொதிப்புட்டில் விரைஇ
    அழகான புட்டில் போன்ற தக்கோலக்காயினை இணைத்து
  • குளவி
    காட்டு மல்லிகைப் பூ
  • வெண்கூதாளம்
    வெண்டாளி
  • நறுஞ்சாந்து
    நறுமணமிக்க சந்தனம்
  • கேழ் கிளர்
    ஒளியுடன் விளங்குகின்ற
  • கொடுந்தொழில் வல் வில் கொலைஇய கானவர்
    வலிமையான வில்லால் விலங்குகளை வேட்டையாடுவதன் மூலம், கொடுமையான கொலைத் தொழிலைச் செய்கின்ற காட்டில் வசிக்கும் வேடர்கள்
  • நீடுஅமை
    நீண்ட மூங்கில்
  • தேக்கள் தேறல்
    தேனால் விளைந்த கள், மது
  • தொண்டகம்
    சிறிய பறை வகைகளுள் ஒன்று
  • சிறுகுடிக் கிளை
    சிறிய ஊரில் வாழும் சுற்றத்தார்
  • குரவை
    ஏழு, எட்டு, அல்லது ஒன்பது பேர்கள் கை கோர்த்தாடும் ஒருவகைக் கூத்து
  • விரல் உளர்ப்பு அவிழ்ந்த
    விரல்கள் தொடுவதால் அலர்ந்த
  • குண்டு சுனை
    ஆழமான சுனை
  • வண்டுபடு கண்ணி
    வண்டுகள் விரும்பி மொய்க்கும் மாலை
  • இணைத்த கோதை
    வெவ்வேறு மாலைகளால் இணைக்கபெற்ற மற்றொரு மாலை
  • அணைத்த கூந்தல்
    மாலைகளால் சேர்த்துக் கட்டப்பெற்ற கூந்தல்
  • முடித்த குல்லை
    இலையைத் தலைமுடி மீது சூடியது போன்று விளங்கும் கஞ்சங்குல்லை
  • இலை உடை நறும்பூ
    இலைகள் இடையிடையே செருகப்பட்டிருந்த நறுமணப் பூங்கொத்துகள்
  • செங்கால் மராத்த வால் இணர்
    சிவந்த அடிப்பகுதியை உடைய கடம்பு மரத்தின் வெண்மையான பூங்கொத்தினையும்
  • சுரும்பு உண
    வண்டுகள் [மலரில் உள்ள தேனினை] உண்ணுமாறு
  • பெருந்தண் மரத்தழை
    பெரிய குளிர்ந்த அழகிய தழையாலாகிய ஆடை
  • திருந்து காழ் அல்குல்
    திருந்திய வடங்களால் ஆகிய [மேகலை போன்ற] அணிகலன் அணியப்பெற்ற இடுப்பு
  • திளைப்ப உடீஇ
    பொருந்துமாறு, அல்லது அசையுமாறு உடுத்திய
  • மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு
    மயிலைப் பார்த்தது போன்ற இளமையோடு கூடிய நடையினை உடைய மகளிருடன்
  • செய்யன்
    சிவந்த மேனியன்
  • செவ்வரை செயலை தண் தளி துயல் வரும் காதினன்
    சிவந்த அடிப்பாகத்தை உடைய அசோக மரத்தின் குளிர்ச்சி பொருந்திய தளிர் அசையும் காதுகளையுடையவன்
  • கச்சு
    இடையில் அணியும் ஒருவகை ஆடை
  • கழல்
    காலில் அணியும் வீரக் கழல்
  • செச்சை
    சிவந்த வெட்சி மலர்
  • கண்ணி
    தலையில் அணியும் மாலை
  • கோடு
    ஊதுகொம்பு
  • பல்லியம்
    பல்வேறுவகை இசைக் கருவிகள்
  • தகர்
    ஆடு
  • மஞ்ஞை
    மயில்
  • புகர் இல்
    குற்றம் இல்லாத
  • நெடியன்
    உயரமானவன்
  • தொடி
    தோளில் அணியும் ஒருவகை அணிகலன்
  • நரம்பு ஆர்த்தன்ன
    நரம்புகளால் ஆகிய 'யாழ்' போன்ற இசைக் கருவி ஒலித்ததைப் போல
  • இன் குரல் தொகுதி
    இனிய குரலினை உடைய மகளிர் குழாம்
  • குறும்பொறி
    சிறிய புள்ளி
  • நறுந்தண் சாயல்
    நறுமணமும் குளிர்ச்சியும் பொருந்திய மென்மை
  • நிலம் நேர்பு
    நிலத்தில் தோய்கின்ற
  • முழவு உறழ்
    தண்ணுமை [மத்தளம்] போன்ற
  • தடக்கை
    பெரிய அல்லது பெருமை பொருந்திய கை
  • இயல் ஏந்தி
    பொருந்தத் தாங்கி
  • மென் தோள்
    மென்மையான தோள்
  • தழீஇ
    தழுவிக்கொண்டு
  • பல்பிணை
    பெண் மான் போன்ற பல மகளிர்க்கு
  • தலைத்தந்து
    முதற்கை தந்து
  • நிலைஇய பண்பே
    திருமுருகப்பெருமானின் நிலையான குணமேயாகும்

kaumaram.com மற்றும் பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com