திருமுருகாற்றுப்படை · 3/6திரு ஆவினன்குடி (பழநி)
Thiru Aavinankudi (Pazhani)
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடும்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனிஇல் காட்சி முனிவர் முன்புக
புகை முகந்தன்ன மாசுஇல் தூஉடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர், இன்நரம்பு உளர
நோய்இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்நகைப்
பருமம் தாங்கிய பணிந்துஏந்து அல்குல்
மாசுஇல் மகளிரொடு மறுஇன்றி விளங்க
கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று
அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்அணி நீள்கொடிச் செல்வனும் வெள் ஏறு
வலம்வயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றுஅடு கொற்றத்து
ஈர்இரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடை
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி
தாமரைப் பயந்த தாஇல் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி காண்வர
பகலில் தோன்றும் இகல்இல் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத்தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந்தன்ன செலவினர் வளியிடைத்
தீஎழுந்தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில் தம்பெறு முறைகொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்து உடன்காண
தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நால்
ஆவினன்குடி அசைதலும் உரியன், அதான்று
பத உரை · word meanings
- சீரை
மரவுரியாலாகிய ஆடை - தைஇய
உடுத்திய - உடுக்கை
ஆடை - சீரொடு
அழகாக - வலம்புரி புரையும்
வலம்புரிச் சங்கினை ஒக்கும் - வால் நரை
வெண்மையாக நரைத்த முடி - மாசு
அழுக்கு - இமைக்கும்
விளங்கும் - மானின் உரிவை
மானின் தோல் - ஊன்கெடு மார்பு
தசை வற்றிய மார்பு - என்பு எழுந்து இயங்கும்
(மார்பு) எலும்பு வெளிப்படுவதைப் போன்று தோற்றமளிக்கும் - நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர்
பகல் நேரத்திலும் உணவு உண்ணா நோன்பினைப் பல நாட்கள் கடைப்பிடிப்பவர்கள் - இகல்
பகை - செற்றம்
நீண்டகால கோபம் - காமம்
ஆசை, அவா - காட்சி
மெய்யறிவாளரின் தோற்றம் - இடும்பை
துன்பம் - யாவதும்
ஒருசிறிதும் - மேவர
மனம் பொருந்திய - துனிஇல்
வெறுப்பில்லாத - புகை முகந்தன்ன
வெண்புகை, அல்லது பாலாவி போன்ற மெல்லிய - மாசு
குற்றம், அழுக்கு - தூஉடை
தூய்மையான உடை - முகை
மொட்டு, அரும்பு - தகை
சிறப்பு, பெருமை - ஆகம்
மார்பு - திவவு
நரம்புக்கட்டு - நவில்தல்
சொல்லுதல் - நயன்
நன்மை, இனிமை, அன்பு - மேவலர்
மேவுதலை உடையவர் - உளர
[யாழின் நரம்புகளைக்கொண்டு] இசையை மீட்ட - யாக்கை
உடல் - மாவின் அவிர் தளிர்
மாமரத்தின் ஒளி பொருந்திய தளிர் - திதலை
தேமல் - பருமம்
பதினெட்டு வடங்கள், அல்லது சரங்களால் ஆகிய 'மேகலை' எனப்படும் அணிகலன் - மாசு
குற்றம் - மறு
குற்றம் - கடு
நஞ்சு - தூம்பு
துளை - வால்
வெண்மையான - எயிறு
பற்கள் - அழல்
நெருப்பு - உயிர்க்கும்
மூச்சுவிடும் - திறல்
வலிமை - சிறை
சிறகுகள் - புள்
பறவை - புள் அணி நீள்கொடிச் செல்வன்
கருடன் எனப்படும் பறவை அலங்கரிக்கும் நீளமான கொடியினை உடைய திருமால் - வெள் ஏறு
வெண்மையான காளை - முக்கண்
'நெற்றிக்கண்'ணையும் சேர்த்து மூன்று கண்கள் - மூஎயில்
'ஆணவம், கன்மம், மாயை' எனப்படும் மூவகை அக இருளை குறிக்கும், 'வெள்ளி, பொன், இரும்பு' ஆகியவற்றால் வானில் அசுரரால் கட்டப்பெற்ற] 'மூன்று அரண்கள்/கோட்டைகள்' - முருக்கிய
அழித்த - நூற்றுப்பத்து அடுக்கிய
நூற்றைப் பத்தாக அடுக்கிய, அஃதாவது 'ஆயிரம்' - நாட்டம்
கண் - வேள்வி முற்றிய
யாகம் செய்த - கொற்றத்து
வெற்றியைப் பெற்ற - மருப்பு
யானைக் கொம்பு - தாழ் பெருந்தடக்கை
[நிலத்தைத் தொடும் வகையில் அமைந்திருந்த] பெரிய துதிக்கை - எருத்தம் ஏறிய
பிடரியின் மீது அமர்ந்த - திருக்கிளர் செல்வன்
அனைத்துச் செல்வங்களையும் உடைய இந்திரன் - நாற்பெருந்தெய்வத்து ... பலர்புகழ் மூவர்
பிரமன், திருமால், சிவபெருமான், இந்திரன் ஆகிய நான்கு பெருமைக்குரிய தெய்வங்களில் பிரமன் அல்லாத, பலராலும் புகழப்படும் ஏனைய மூவர் - நன்னகர் நிலைஇய
நல்ல நகரங்கள் நிலைபெற்று விளங்க - உலகம் காக்கும் ஒன்றுபுரிக்கொள்கை
உலகத்தைக் காப்பதையே தலையான கோட்பாடாகக்கொண்ட [பலர் புகழ் மூவர்] - ஏம் (ஏமம்)
காவல் - தாமரை பயந்த தாஇல் ஊழி நன்முக ஒருவற் சுட்டி
திருமாலின் உந்தித் தாமரையில் உதித்த நான்முகனாகிய பிரம்மனைக் குறித்து - பகலில் தோன்றும்
பகல் நேரத்தில் தோன்றும் கதிரவன் போன்றவர்கள் - இகல்
மாறுபாடு/வேறுபாடு/பகை - நால்வேறு இயற்கை பதினொரு மூவர்
முப்பத்து முக்கோடித் தேவர்கள் - ஒன்பதிற்று இரட்டி உயர்நிலைப் பெறீஇயர்
பதினெட்டு கணங்கள் - தாஇல்
குற்றமற்ற - மடந்தை
தெய்வயானை-அம்மையார் - அசைதல்
தங்குதல், அமர்ந்திருத்தல்



