
தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனே.
எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ
அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ
தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே.
செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ
கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ
மெய்கொள் புளகம் மூடேனோ மெய்அன் பர்கள்பால் கூடேனோ
பொய்கொள் உலகோ டூடேனோ புவிமீ திருகால் மாடேனே.
வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ
முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ
கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே.
நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ
கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள்நீர் உண்ணேனோ
சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ
காட்டும் அவர்தாள் கண்ணேனோ கழியா வாழ்க்கைப் புண்ணேனே.
காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ
ஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ
மாமற் றொருவீ டடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ
தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே.
காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ
பாவி மயலை மிதியேனோ பரமானந்தத் துதியயேனோ
ஓவில் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ
தாவில் சுகத்தை மதியேனோ சற்றும் பயனில் ஓதியேனே.
வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னாரோ
இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ
பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ
செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.
தணிகா சலம்போய்த் தழையேனோ சாமி திருத்தாள் விழையேனோ
பணிகா தலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ
திணிகாண் உலகை அழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ
பிணிகாண் உலகில் பிறந்துழன்றே பேதுற் றலையும் பழையேனே.
மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தைக் காயாரோ
இன்னும் கோபம் ஓயாரோ என்தாய் தனக்குத் தாயாரோ
துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ
பன்னும் வளங்கள் செறிந்தோங்கும் பணைகொள் தணிகைத் தூயாரே.



