திருவருட்பா · 23ஏழைமையின் இரங்கல்

தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து நலிகின்ற செய்கை நலமோ.
1
நலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர் நவைஏக நல்கு தணிகா
சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்ப தென்று புகலாய்
நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப மயில்ஏறி நின்ற மணியே.
2
மணியே கலாப மலைமேல் அமர்ந்த மதியே நினைச்சொல் மலரால்
அணியேன் நல்அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடிக்கண் மகிழ்வாய்ப்
பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்த படியே
எணியே நினைக்கில் அவமாம்இவ் வேழை எதுபற்றி உய்வ தரசே.
3
உய்வண்ணம் இன்றி உலகா தரத்தில் உழல்கின்ற மாய மடவார்
பொய்வண்ணம் ஒன்றின் மனமாழ்கி அன்மை புரிதந்து நின்ற புலையேன்
மெய்வண்ணம் ஒன்று தணிகா சலத்து மிளிர்கின்ற தேவ விறல்வேல்
கைவண்ண உன்றன் அருள்வண்ணம் ஆன கழல்வண்ணம் நண்ணல் உளதோ.
4
நண்ணாத வஞ்சர் இடம்நாடி நெஞ்சம் நனிநொந்து நைந்து நவையாம்
புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம்பொன் அடியை
எண்ணாத பாவி இவன்என்று தள்ளின் என்செய்வ துய்வ தறியேன்
தண்ணார் பொழிற்கண் மதிவந் துலாவு தணிகா சலத்தி றைவனே.
5
இறையேனும் உன்றன் அடிஎண்ணி அங்கி இழுதென்ன நெஞ்சம் இளகேன்
மறைஓதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட் டலங்கல் அணியேன்
குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ
நிறையோர் வணங்கு தணிகா சலத்தில் நிலைபெற் றிருக்கும் அவனே.
6
அவம்நாள் கழிக்க அறிவேன் அலாதுன் அடிபேணி நிற்க அறியேன்
தவம்நாடும் அன்ப ரொடுசேர வந்து தணிகா சலத்தை அடையேன்
எவன்நான் எனக்கும் அவண்நீ இருக்கும் இடம்ஈயில் உன்றன் அடியார்
இவன்ஆர் இவன்றன் இயல்பென்ன என்னில் எவன்என் றுரைப்பை எனையே.
7
எனையான் அறிந்துன் அடிசேர உன்னை இறையேனும் நெஞ்சி னிதமாய்
நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம்என் றுழன்று துயர்வேன்
தனையே நின்அன்பன் எனவோதி லியாவர் தகும்என் றுரைப்பர் அரசே
வனைஏர் கொளுஞ்செய் தணிகா சலத்து மகிழ்வோ டமர்ந்த அமுதே.
8
முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன்
மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன்
இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே.
9

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com