
பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.
எய்தற் கரிய அருட்சுடரே எல்லாம் வல்ல இறையோனே
செய்தற் கரிய வளத்தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை
உய்தற் பொருட்டிங் குச்சரித்தே உயர்ந்த திருவெண்ணீறிட்டால்
வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும் வன்கண் ஒன்றும் வாராதே.
வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
இகவா அடியர் மனத்தூறும் இன்பச் சுவையே எம்மானே
அகவா மயில்ஊர் திருத்தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
உகவா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
சுகவாழ் வின்பம் அதுதுன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.
துன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே
அன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை
உன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.
சேரும் முக்கண் கனிகனிந்த தேனே ஞானச் செழுமணியே
யாரும் புகழும் தணிகைஎம தன்பே உன்றன் ஆறெழுத்தை
ஓரும் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
பாரும் விசும்பும் பதஞ்சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே.
சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.
அழியாப் பொருளே என்உயிரே அயில்செங் கரங்கொள் ஐயாவே
கழியாப் புகழ்சேர் தணிகைஅமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை
ஒழியா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
பழியா இன்பம் அதுபதியும் பனிமை ஒன்றும் பதியாதே.
பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே
கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
துதிஏர் நினது பதந்தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே.
தோன்றா ஞானச் சின்மயமே தூய சுகமே சுயஞ்சுடரே
ஆன்றார் புகழும் தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
ஊன்றா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
ஈன்றாள் நிகரும் அருள்அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே.



