
கற்கி லேன்உன தருட்பெயர் ஆம்குக கந்தஎன் பவைநாளும்
நிற்கி லேன்உன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ
சொற்கி லேசமில் அடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே
அற்கி லேர்தரும் தணிகைஆர் அழுதமே ஆனந்த அருட்குன்றே.
பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பிலாப் பிழைநோக்கித்
தேவ ரீர்மன திரக்கமுற் றேஅருள் செய்திடா திருப்பீரேல்
காவ லாகிய கடும்பிணித் துயரம்இக் கடையனேன் தனக்கின்னும்
யாவ தாகுமோ என்செய்கோ என்செய்கோ இயலும்வேல் கரத்தீரே.
சேவி யாதஎன் பிழைகளை என்னுளே சிறிதறி தரும்போதோ
பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே.
துன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்
அன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
வன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ
இன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே.
என்செய் கேன்இனும் திருவருள் காண்கிலேன் எடுக்கரும் துயர்உண்டேன்
கன்செய் பேய்மனக் கடையனேன் என்னினும் காப்பதுன் கடன்அன்றோ
பொன்செய் குன்றமே பூரண ஞானமே புராதனப் பொருள்வைப்பே
மன்செய் மாணிக்க விளக்கமே தணிகைவாழ் வள்ளலே மயிலோனே.
மண்ணில் நண்ணிய வஞ்சகர் பால்கொடு வயிற்றினால் அலைப்பட்டேன்
கண்ணில் நண்ணரும் காட்சியே நின்திருக் கடைக்கண்ணோக் கருள்நோக்கி
எண்ணி எண்ணிநெஞ் சழிந்துகண்ணீர்கொளும் ஏழையேன் தனக்கின்னும்
புண்ணில் நண்ணிய வேல்எனத் துயர்உறில் புலையன்என் செய்கேனே.
மலங்கி வஞ்சகர் மாட்டிரந் தையகோ வருந்திநெஞ் சயர்வுற்றே
கலங்கி நின்திருக் கருணையை விழையும்என் கண்அருள் செய்யாயோ
இலங்கி எங்கணும் நிறைந்தருள் இன்பமே எந்தையே எந்தாயே
நலங்கி ளர்ந்திடும் தணிகையம் பதியமர் நாயக மணிக்குன்றே.
சைவ நாயக சம்பந்தன் ஆகிய தமிழ்அருட் குன்றேஎன்
தெய்வ மேநினை அன்றிஓர் துணையிலேன் திருவருள் அறியாதோ
வைவ தேகொளும் வஞ்சகர் தம்இடை வருந்திநெஞ் சழிகின்றேன்
செய்வ தோர்கிலேன் கைவிடில் என்செய்கேன் தெளிவிலாச் சிறியேனே.
வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருளாளா
கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
வேழ்வி ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
என்றும் மாதர்மேல் இச்சைவைத் துன்றனை எண்ணுவேன் துயருற்றால்
கன்று நெஞ்சகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில்சால
நன்று நன்றெனக் கெவ்வணம் பொன்அருள் நல்குவை அறிகில்லேன்
துன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே.



