
வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
திரங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துள் உருக அழுதழுது
கரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்
எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே
சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சன்னப் பெருவேரைக்
கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
போதல் இருத்தல் எனநினையாப் புனிதர் சனனப் போரோடு
சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
மட்டித் தளறு படக்கடலை மலைக்கும் கொடிய மாஉருவைச்
சட்டித் தருளும் தணிகையில்எந் தாயே தமரே சற்குருவே
எட்டிக் கனியாம் இவ்வுலகத் திடர்விட் டகல நின்பதத்தைக்
கட்டித் தழுவிநின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
பள்ள உலகப் படுகுழியில் பரிந்தங் குழலா தானந்த
வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
விடலை எனமூ வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
நடலை உலக நடைஅளற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.



