திருவருட்பா  12. ஆளுடைய அடிகள் அருண்மாலை

தேசகத்தில்  இனிக்கின்ற  தெள்ளமுதே  மாணிக்க 
வாசகனே  ஆனந்த  வடிவான  மாதவனே 
மாசகன்ற  நீதிருவாய்  மலர்ந்ததமிழ்  மாமறையின் 
ஆசகன்ற  அனுபவம்நான்  அனுபவிக்க  அருளுதியே. 
1
கருவெளிக்குட்  புறனாகிக்  கரணமெலாங்  கடந்துநின்ற 
பெருவெளிக்கு  நெடுங்காலம்  பித்தாகித்  திரிகின்றோர் 
குருவெளிக்கே  நின்றுழலக்  கோதறநீ  கலந்தனி 
உருவெளிக்கே  மறைபுகழும்  உயர்வாத  வூர்மணியே. 
2
மன்புருவ  நடுமுதலா  மனம்புதைத்து  நெடுங்காலம் 
என்புருவாய்த்  தவஞ்செய்வார்  எல்‘ரும்  ஏமாக்க 
அன்புருவம்  பெற்றதன்பின்  அருளுருவம்  அடைந்துபின்னர் 
இன்புருவம்  ஆயினைநீ  எழில்வாத  வூர்இறையே. 
3
உருஅண்டப்  பெருமறைஎன்  றுலகமெலாம்  புகழ்கின்ற 
திருஅண்டப்  பகுதிஎனும்  திருஅகவல்  வாய்மலர்ந்த 
குருஎன்றெப்  பெருந்தவரும்  கூறுகின்ற  கோவேநீ 
இருஎன்ற  தனிஅகவல்  எண்ணம்எனக்  கியம்புதியே. 
4
தேடுகின்ற  ஆனந்தச்  சிற்சபையில்  சின்மயமாய் 
ஆடுகின்ற  சேவடிகக்கீழ்  ஆடுகின்ற  ஆரமுதே 
நாடுகின்ற  வாதவூர்  நாயகனே  நாயடியேன் 
வாடுகின்ற  வாட்டமெலாம்  வந்தொருக்கால்  மாற்றுதியே. 
5
சேமமிகும்  திருவாத  வூர்த்தேவென்  றுலகுபுகழ் 
மாமணியே  நீஉரைத்த  வாசகத்தை  எண்ணுதொறும் 
காமமிகு  காதலன்றன்  கலவிதனைக்  கருதுகின்ற 
ஏமமுறு  கற்புடையாள்  இன்பினும்இன்  பெய்துவதே. 
6
வான்கலந்த  மாணிக்க  வாசகநின்  வாசகத்தை 
நான்கலந்து  பாடுங்கால்  நற்கருப்பஞ்  சாற்றினிலே 
தேன்கலந்து  பால்கலந்து  செழுங்கனித்தீஞ்  சுவைகலந்தென் 
ஊன்கலந்து  உயிர்கலந்து  உவட்டாமல்  இனிப்பதுவே. 
7
வருமொழிசெய்  மாணிக்க  வாசகநின்  வாசகத்தில் 
ஒருமொழியே  என்னையும்என்  உடையனையும்  ஒன்றுவித்துத் 
தருமொழியாம்  என்னில்இனிச்  சாதகமேன்  சஞ்சலமேன் 
குருமொழியை  விரும்பிஅயல்  கூடுவதேன்  கூறுதியே. 
8
பெண்சுமந்த  பாகப்  பெருமான்  ஒருமாமேல் 
எண்சுமந்த  சேவகன்போல்  எய்தியதும்  வைகைநதி 
மண்சுமந்து  நின்றதும்ஓர்  மாறன்  பிரம்படியால் 
புண்சுமந்து  கொண்டதும்நின்  பொருட்டன்றோ  புண்ணியனே  . 
9
வாட்டமிலா  மாணிக்க  வாசகநின்  வாசத்தைக் 
கேட்டபொழு  தங்கிருந்த  கீழ்ப்பறவைச்  சாதிகளும் 
வேட்டமுறும்  பொல்லா  விலங்குகளும்  மெய்ஞ்ஞான 
நாட்டமுறும்  என்னில்இங்கு  நானடைதல்  வியப்பன்றே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com