
திருவருட்பா · 98திருவருள் விலாசம்
ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்
அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே.
திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே.



