திருவருட்பா · 91தனித் திருப்புலம்பல்

திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே.
1
அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே.
2
ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
3
கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே.
4

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com