
வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்
சந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்
வன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது
நின்மலக்கண் தண்ணருள்தான் நேர்.
சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
காய்நின்று சந்துரைத்த தார்.
நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
கோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்
அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
சந்தோட மோநின் றனக்கு.
நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
எங்ஙனம்என் றுள்ளம் எழும்.
ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
தாழ்த்தேன்என் செய்தேன் தவம்.
உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
கொடாதே எனைஏன்று கொள்.
என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்
சொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத்
துன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்
அன்பர்க் கருள்வோய் அருள்.
அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
கடையேன் படுந்துயரைக் கண்டு.
பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டித் - தகவின்
அருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
திருச்சிற் சபையானைத் தேர்ந்து.
தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
தாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா
நந்தா மணியே நமச்சிவா யப்பொருளே
எந்தாய் எனப்புகழ வே.
பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்
கைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட
பொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ
என்னேநின் தன்மைமன மே.
இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்
அவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்
சொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்
கென்னால் உறவே தினி.
கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்
பால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்
கரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்
பெரிதார ஓர்மொழியைப் பேசு.



