
நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத்
தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும்
பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம
ஒரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால்
கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும்
தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால்
ஒட்டுப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும்
சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால்
ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும்
ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப்
பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக்
கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள
ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும்
இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர்
மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர்
உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.



