திருவருட்பா  83. கலி விண்ணப்பம்

செறியாத  நெஞ்சக  வஞ்சக  னேன்இச்  சிறுதலத்தே 
அறியா  தறிந்தவன்  போற்சில  செய்திடல்  ஐயநின்தாள் 
குறியா  தரித்தல  தாணைமற்  றில்லைஎங்  கொற்றவனே 
முறியா  தருள்செய்தி  யோதெரி  யேன்எந்தை  முன்னியதே. 
1
தீதொன்று  மேகண்  டறிந்ததல்  லால்பலன்  சேரநலம் 
யாதொன்றும்  நான்கண்  டறியேன்  அறிந்தவன்  என்னஇங்கே 
போதொன்று  போக்குகின்  றேன்பிழை  யாவும்  பொறுத்தருள்வாய் 
மாதொன்று  பாகத்  துணைஅன்றி  நற்றுணை  மற்றிலையே. 
2
எல்லாம்  தெரிந்த  இறைவாநின்  தண்ணருள்  எய்துகிலாப் 
பொல்லாத  பாவிப்  புலையேன்  பிழையைப்  பொறுத்தருள்வாய் 
கல்லா  மனக்கடை  யாலே  கடைவைத்துக்  கண்டதுதுன் 
பல்லால்  அணுத்துணை  யும்அறி  யேன்இன்பம்  ஆவதுவே. 
3
மண்ணுடை  யாரிடை  வாளா  மனஞ்செல  வைத்ததலால் 
எண்ணுடை  யாரிடை  எய்திநின்  தாண்மலர்  ஏத்துகிலேன் 
புண்ணுடை  யாரிற்  புலம்புகின்  றேனைப்  பொறுத்தருள்முக் 
கண்ணுடை  யாய்கழற்  காலுடை  யாய்மணி  கண்டத்தனே. 
4
தாழாத  துன்பச்  சமுத்திரத்  தேஇத்  தனிஅடியேன் 
வீழாத  வண்ணம்  கருணைசெய்  வாய்என்னை  வேண்டிஅந்நாள் 
ஊழாம்  வினைதவிர்த்  தாண்டனை  யேஎன்  உடையவனே 
வாழா  வகைஎனை  இந்நாள்  விடுத்தல்  வழக்கலவே. 
5
ஊன்செய்த  வெம்புலைக்  கூட்டின்  பொருட்டிங்  குனைமறந்து 
நான்செய்த  தீமையை  நானே  நினைக்க  நடுங்குகின்றேன் 
ஏன்செய்  தனைஎனக்  கேளாது  மேலும்  இரங்குகின்றாய் 
வான்செய்த  நாதநின்  தண்ணருள்  வண்ணம்என்  வாழ்த்துவனே. 
6
ஆயாது  நான்செயும்  குற்றங்  களைக்கண்  டறியில்பெற்ற 
தாயாயி  னும்பொறுப்  பாளல  ஆங்கவை  சற்றலவே 
ஓயாது  செய்யுந்  தொறும்பொறுத்  தாளும்  உனைஎளியேன் 
வாயால்  உரைக்கவும்  மாட்டேன்அந்  தோஎன்ன  வன்மைஇதே. 
7
ஒன்றுந்  தெரிந்திட  மாட்டாப்  பருவத்  துணர்வுதந்தாய் 
இன்றுந்  தருதற்  கிறைவா  நின்உள்ளம்  இயைதிகொலோ 
கன்றுங்  கருத்தொடு  மாழ்குகின்  றேன்உன்  கழல்அடிக்கே 
துன்றுங்  கருத்தறி  யேன்சிறி  யேன்என்  துணிவதுவே. 
8
ஆவா  எனஎனை  ஆட்கொள  வேண்டும்  அடிமைகொண்ட 
தேவாஎன்  குற்றம்  திருவுளத்  தெண்ணில்என்  செய்திடுவேன் 
வாவா  எனஅழைப்  பார்பிறர்  இல்லை  மறந்தும்என்றன் 
நாவால்  உரைக்கவும்  மாட்டேன்  சிறுதெய்வ  நாமங்களே. 
9
பள்ளத்தி  லேசெலும்  நீர்போல்என்  உள்ளம்  பரப்பதலால் 
எள்ளத்தி  லேசிறி  தாயினும்  நான்செல்வ  தில்லைஎந்தாய் 
கள்ளத்தி  லேசொல்லு  கின்றேன்  அலநின்  கழலிணைஎன் 
உள்ளத்தி  லேநின்ற  ஆங்கவை  காண்க  உடையவனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com