திருவருட்பா · 104வெண்ணிலா

தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே.
1
நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
2
சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்
தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
3
இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.
4
தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே.
5
போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்
போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
6
ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
7
அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
8
வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே.
9
குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்
குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
10
ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.
11
வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்
விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே.
12
முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே.
13
நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
14
ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை
நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
15
வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.
16
ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்
அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே.
17
ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே.
18
அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
19
அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே.
20
அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
21
அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே.
22
அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே.
23

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits