திருவருட்பா  103. பாங்கியர்க் கறிவுறுத்தல்

அம்பலத்தில்  ஆடுகின்றார்  பாங்கிமா  ரே  -  அவர் 
ஆட்டங்கண்டு  நாட்டங்கொண்டேன்  பாங்கிமா  ரே. 
1
ஆடுகின்ற  சேவடிமேற்  பாங்கிமா  ரே  -  மிக 
ஆசைகொண்டு  வாடுகின்றேன்  பாங்கிமா  ரே. 
2
இன்பவடி  வாய்ச்சபையிற்  பாங்கிமா  ரே  -  நட 
மிட்டவர்மே  லிட்டம்வைத்தேன்  பாங்கிமா  ரே. 
3
ஈனவுடற்  கிச்சைவையேன்  பாங்கிமா  ரே  -  நட 
னேசர்தமை  யெய்தும்வண்ணம்  பாங்கிமா  ரே. 
4
உத்தமர்பொன்  னம்பலத்தே  பாங்கிமா  ரே  -  இன்ப 
உருவாகி  ஓங்குகின்றார்  பாங்கிமா  ரே. 
5
ஊனவுல  கைக்கருதேன்  பாங்கிமா  ரே  -  மன்றில் 
உத்தமருக்  குறவாவேன்  பாங்கிமா  ரே. 
6
கற்பனையெல்  லாங்கடந்தார்  பாங்கிமா  ரே  -  என்றன் 
கற்பனைக்குட்  படுவாரோ  பாங்கிமா  ரே. 
7
கண்டிலர்நான்  படும்பாடு  பாங்கிமா  ரே  -  மூன்று 
கண்ணுடையா  ரென்பாரையோ  பாங்கிமா  ரே. 
8
கன்மனமெல்  லாங்கரைப்பார்  பாங்கிமா  ரே  -  மனங் 
கரையாரென்  னளவிலே  பாங்கிமா  ரே. 
9
கள்ளமொன்று  மறியேனான்  பாங்கிமா  ரே  -  என்னைக் 
கைவிடவுந்  துணிவாரோ  பாங்கிமா  ரே. 
10
கற்பழித்துக்  கலந்தாரே  பாங்கிமா  ரே  -  இன்று 
கைநழுவ  விடுவாரோ  பாங்கிமா  ரே. 
11
கண்டவரெல்  லாம்பழிக்கப்  பாங்கிமா  ரே  -  என்றன் 
கன்னியழித்  தேயொளித்தார்  பாங்கிமா  ரே. 
12
காமனைக்கண்  ணாலெரித்தார்  பாங்கிமா  ரே  -  என்றன் 
காதலைக்கண்  டறிவாரோ  பாங்கிமா  ரே. 
13
காவலையெல்  லாங்கடந்து  பாங்கிமா  ரே  -  என்னைக் 
கைகலந்த  கள்ளரவர்  பாங்கிமா  ரே. 
14
காணவிழைந்  தேனவரைப்  பாங்கிமா  ரே  -  கொண்டு 
காட்டுவாரை  யறிந்திலேன்  பாங்கிமா  ரே. 
15
கிட்டவர  வேண்டுமென்றார்  பாங்கிமா  ரே  -  நான் 
கிட்டுமுன்னே  யெட்டநின்றார்  பாங்கிமா  ரே. 
16
கின்னரங்கே  ளென்றிசைத்தார்  பாங்கிமா  ரே  -  நான் 
கேட்பதன்முன்  சேட்படுத்தார்  பாங்கிமா  ரே. 
17
கிள்ளையைத்தூ  தாவிடுத்தேன்  பாங்கிமா  ரே  -  அது 
கேட்டுவரக்  காணேனையோ  பாங்கிமா  ரே. 
18
கீதவகை  பாடிநின்றார்  பாங்கிமா  ரே  -  அது 
கேட்டுமதி  மயங்கினேன்  பாங்கிமா  ரே. 
19
கீழ்மைகுறி  யாமலென்னைப்  பாங்கிமா  ரே  -  மனக் 
கேண்மைகுறித்  தாரேயன்று  பாங்கிமா  ரே. 
20
கீடமனை  யேனெனையும்  பாங்கிமா  ரே  -  அடிக் 
கேயடிமை  கொண்டாரன்று  பாங்கிமா  ரே. 
21
குற்றமெல்லாங்  குணமாகப்  பாங்கிமா  ரே  -  கொள்ளுங் 
கொற்றவரென்  கொழுநர்காண்  பாங்கிமா  ரே. 
22
குற்றமொன்றுஞ்  செய்தறியேன்  பாங்கிமா  ரே  -  என்னைக் 
கொண்டுகுலம்  பேசுவாரோ  பாங்கிமா  ரே. 
23
குஞ்சிதப்பொற்  பாதங்கண்டாற்  பாங்கிமா  ரே  -  உள்ள 
குறையெல்லாந்  தீருங்கண்டீர்  பாங்கிமா  ரே. 
24
கூற்றுதைத்த  பாதங்கண்டீர்  பாங்கிமா  ரே  -  நங்கள் 
குடிக்கெல்லாங்  குலதெய்வம்  பாங்கிமா  ரே. 
25
கூறரிய  பதங்கண்டு  பாங்கிமா  ரே  -  களி 
கொண்டுநிற்க  விழைந்தேனான்  பாங்கிமா  ரே. 
26
கூடல்விழைந்  தேனவரைப்  பாங்கிமா  ரே  -  அது 
கூடும்வண்ணம்  கூட்டிடுவீர்  பாங்கிமா  ரே. 
27

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com