திருமுருகாற்றுப்படை · 1/6திருப்பரங்குன்றம்

ThiruParankundram

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமம் சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்
கிண்கிணி கவைஅய ஒண்செஞ் சீறடி
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர்இழை
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணைஈர் ஓதிச்
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு
பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளி
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்து
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்து
துவர் முடித்த துகள்அறும் உச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇ கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்இணர் அட்டி
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ
... ... ... துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேம்கமழ் மருது இணர்கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர
வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெரியா
கோழி ஓங்கிய வென்றுஅடு விறல்கொடி
வாழிய பெரிது என்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி
சூரர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்கு
சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்
உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதிஆடிய கூர்உகிர்க் கொடு விரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறல்களம் பாடித் தோள்பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து
எய்யா நல்இசை செவ்வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்
செலவுநீ நயந்தனை ஆயின் பலஉடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீமுன்னிய வினையே
செருப் புகன்றுஎடுத்த சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர்த் தேய்த்த போர் அருவாயில்
திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து
மாடம் மலிமறுகின் கூடல் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல்விரிந்து வாய்அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதான்று

பத உரை · word meanings

  • உலகம்
    உலகத்தில் வாழும் உயிர்கள்
  • உவப்ப
    மகிழ
  • வலன் ஏர்பு
    வலப்பக்கமாக எழுந்து
  • கடல் கண்டாங்கு
    [கிழக்குக்] கடலில் தோன்றியதைப் போல
  • ஞாயிறு
    கதிரவன்
  • ஓ அற இமைக்கும்
    இரு கண்களின் பார்வையும் செல்லுவதற்குரிய பொருள்மேல் செல்லாமல் கண்களின் இதழ்கள் இரண்டையும் குவிக்கும்
  • சேண்விளங்கு அவிர் ஒளி
    தூரத்தில் விளங்கும் பேரொளி
  • உறுநர்
    சார்ந்தவர்கள், அடியார்கள், பக்தர்கள்
  • மதன்
    அழகு
  • நோன்
    வலிமை
  • தாள்
    பாதம்/திருவடிகள்
  • செறுநர்
    பகைவர்
  • செல்
    இடி
  • உறழ்
    போன்ற
  • தடக்கை
    பெரிய, அல்லது பெருமை பொருந்திய கை
  • வாள்நுதல்
    ஒளி பொருந்திய நெற்றியையுடைய தெய்வயானை -அம்மையார்
  • கார்
    கரிய நிறமுடைய மழை-மேகம்
  • கார்கோள்
    [மழை பெய்வதற்கென்று மேகத்தால் முகந்து] கொள்ளப்படும் கடல் நீர்
  • கமம்
    நிறைவு
  • சூல்
    கரு; மழை பெய்வதற்குரிய மேகத்தை 'சூல் முகில்' என்று புலவர்கள் அழைப்பர்
  • வாள்
    ஒளி
  • போழ்
    பிளக்கும், போக்கும்
  • வள் உறை
    பெரிய, அல்லது பெருமை பொருந்திய மழைத் துளி
  • பொதுளிய
    தழைத்த
  • பராரை
    பருமனான அடிப்பாகம்
  • மராஅத்து
    செங்கடம்பு மரம் [Eugenia racemosa]; 'கார்க்கடம்பு' என அழைக்கப்படும் இம் மரம் [கொன்றை மரத்தைப் போன்று] கார்காலத்தில் மலரும் இயல்புடையது; செங்கடம்பு மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை திருமுருகப்பெருமானுக்குரிய மாலை; அதனால்தான் திருமுருகப்பெருமானின் மற்றொரு திருப்பெயர் 'கடம்பன்' என்பதாகும் [மாணிக்கனார் 1999 94-96].
  • மால்
    பெரிய
  • வரை
    மூங்கில்
  • நிவந்த
    உயரமாக வளர்ந்துள்ள
  • சேண்
    தூரம்
  • வெற்பு
    மலை
  • கிண்-கிணி
    கணுக்காலில் அணியப்பெறும் ஒருவகை அணிகலனாகிய சதங்கை
  • கவைஇய
    பொருந்திய
  • ஒண்செஞ் சீறடி
    ஒளியுடைய சிவந்த சிறிய பாதம்
  • கணைக்கால்
    உறுதியான திரண்ட கால்
  • வாங்கிய நுசும்பு
    வளைந்த இடை
  • பணைத்தோள்
    மூங்கில் போன்ற தோள்
  • கோபம்
    'இந்திர-கோபம்' எனப்படும் செந்நிறப் பூச்சி
  • பூந்துகில்
    பூக்களைப் போன்ற வடிவங்கள் பொறிக்கப்பெற்ற ஆடை
  • பல்காசு
    பலவகை மணிகள்
  • சில்காழ்
    சில வடம் [சரம்]
  • அல்குல்
    இடை, அடிவயிற்றுப் பாகம்
  • கவின்
    அழகு
  • நாவல்
    'சாம்பூநதம்' எனப்படும் ஒருவகை தரம் வாய்ந்த பொன்
  • பொலம்
    பொன்
  • அவிர்
    ஒளி
  • இழை
    அணிகலன்
  • செயிர்தீர்
    குற்றமற்ற
  • துணையோர்
    தோழியர்
  • இணை
    கூந்தலின் இறுதிப்பாகம் ஒத்திருத்தல்
  • ஈர்ஓதி
    நெய்ப்புடைய கூந்தல்
  • செங்கால் வெட்சி
    சிவந்த காம்பினை உடைய வெட்சி மலர்
  • சீறிதழ்
    சிறிய இதழ்
  • இடுபு
    இட்டு
  • தெய்வ உத்தி
    'சீதேவி', 'வலம்புரி' எனப்படும் ஒருவகை தலைக் கோலம்
  • வயின் வைத்து
    வைத்தற்குரிய இடத்தில் வைத்து
  • திலகம்
    நெற்றிப்பொட்டு
  • தைஇய
    இடப்பட்ட
  • தேம்கமழ்
    நறுமணம் உடைய
  • மகரப்பகுவாய்
    'மகர' (சுறா) மீனின் திறந்த வாயைப் போன்ற வடிவில் அமைந்த ஒருவகைத் தலைக் கோலம்
  • தாழ மண்ணுறுத்து
    நெற்றியில் தங்குமாறு அலங்கரித்து
  • துவர முடித்த
    முற்றமுடித்த
  • துகள் அறும் உச்சி
    குற்றமற்ற கொண்டை
  • செரீஇ
    செருகி
  • கருந்தகட்டு உள் ஐ பூ
    கரிய புற இதழையும் உள்ளே துளையையும் உடைய
  • கீழ்நீர்ச் செவ்வரும்பு
    நீரின் கீழ் அமிழ்ந்திருந்த சிவந்த அரும்பு
  • இணைப்புறு பிணையல்
    கட்டப்பட்ட மாலை
  • வளைஇ
    வளைய வைத்து
  • துணைத்தக
    ஒன்றிற்கொன்று இணையாக
  • வண் காது
    வளம் பொருந்திய செவிகள்
  • பிண்டி
    அசோகம்
  • ஆகம்
    மார்பு
  • காழ்
    வயிரம்
  • நறும்
    நறுமணம் உடைய
  • குறடு
    [சந்தனக்] கட்டை
  • உரிஞ்சிய
    உரைத்த (தேய்த்த)
  • பூங்கேழ்த் தேய்வை
    பொலிவுடைய நிறம் பொருந்திய, தேய்த்து எடுத்த, சந்தனக் குழம்பு
  • கோங்கு
    கோங்கு மரம்
  • வேங்கை
    வேங்கை மரம்
  • தாது
    மகரந்தம்
  • காண்
    அழகு
  • வெள்ளிள்
    விளா மரம்
  • குறுமுறி
    சிறிய தளிர்
  • கிள்ளுபு
    கிள்ளி
  • தெறியா
    தெறித்து
  • சிலம்பு
    மலை
  • சிலம்ப
    எதிர் ஒலிக்க
  • மந்தி
    குரங்கு
  • அடுக்கம்
    பக்க மலை
  • சுரும்பு
    வண்டு
  • மூசா
    மொய்க்காத
  • சுடர்ப்பூங் காந்தள்
    தீயைப் போன்ற நிறமுடைய செங்காந்தள் மலர்
  • தண்கண்ணி
    குளிர்ச்சி பொருந்திய [தலைமுடியைச் சுற்றி அணியும்] 'கண்ணி' எனப்படும் ஒருவகை மாலை
  • சென்னியன்
    திருமுடியை உடைய திருமுருகப்பெருமான்
  • பார்
    பாறை
  • பனிக்கடல்
    பனி போல உறைந்து குளிர்ந்த கடல்
  • சூர்முதல்
    அசுரர்களின் தலைவன் [சூரபன்மன்]
  • தடிந்த
    பிளந்த, பிளந்து கொன்ற
  • சுடர்
    ஒளி
  • நெடுவேல்
    நீண்ட வேல்
  • உலறிய கதுப்பு
    நெய்ப்பு இன்றி உலர்ந்த தலைமுடி
  • பிறழ்பல்
    வரிசையாய் அமைந்திராத பற்கள்
  • பேழ் வாய்
    பிளந்த, அல்லது பெரிய வாய்
  • சூர்த்த நோக்கின்
    அச்சம் தரும், அல்லது கொடிய பார்வையுடன்
  • கழல்கண் கூகையொடு
    வெளியே பிதுங்கும் கண்களையுடைய பெரிய ஆந்தை
  • பெருமுலை அலைக்கும் காதின்
    பெரிய முலையை வருத்தும் காதணியாகிய [பாம்பு]
  • பிணர்
    சொரசொரப்பான
  • மோடு
    வயிறு
  • செலவு
    நடை
  • குருதி ஆடிய
    இரத்தத்தைக் கலக்கிய
  • கொடுஉகிர்
    வளைந்த நகம்
  • தொட்டு
    தோண்டி
  • கழிமுடை
    நாற்றம் உடைய
  • வெருவர
    அச்சம் தோன்ற
  • அடுவிறல்
    போரில் பெறும் வெற்றி
  • நிணம்
    கொழுப்பு
  • துணங்கை
    [போர்க்களத்தில்] முடக்கிய இரு கைகளையும் விலாப் புடைகளில் ஒற்றி அடித்துக்கொண்டு தோளை உயர்த்தி அசைந்து ஆடும் ஒருவகைக் கூத்து
  • தூங்க
    ஆட
  • இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
    குதிரை முகத்தோடு கூடிய பெரியதொரு மனித உடல்
  • அஞ்சுவர
    அச்சம்தோன்ற
  • அவுணர்
    அசுரர்
  • கவிழ் இணர்
    கீழ்நோக்கி மலர்ந்திருக்கும் மலர்க் கொத்து
  • மாமுதல் தடிந்த
    மாமரத்தின் அடியை வெட்டி வீழ்த்திய
  • மறு இல்
    குற்றம் இல்லாத
  • கொற்றம்
    வெற்றி
  • எய்யா நல்லிசை
    எவராலும் அளந்தறிய இயலாத நற்புகழ்
  • சேஎய்
    சிவந்த திருமேனியினையுடைய திருமுருகப்பெருமான்
  • சேவடி
    [முக்தியைத் தரவல்ல திருமுருகப்பெருமானின்] சிவந்த திருவடிகள்
  • செம்மல் உள்ளம்
    [முக்தியைப் பெறுவதற்குரிய] செம்மையான உள்ளம்
  • நலம்புரிக்கொள்கை
    அனைவருக்கும் நன்மைகளைச் செய்ய விரும்பும் கொள்கை
  • புலம் பெயர்ந்து உறையும்
    ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று தங்கும்
  • நன்னர் நெஞ்சத்து
    நல்ல உள்ளத்தின்
  • இன் நசை வாய்ப்ப
    இனிய [முக்திப் பேற்றினைப் பெறும்] விருப்பம் நிறைவேறுமாறு
  • இன்னே பெறுதி
    இப்பொழுதே பெறுவாய்
  • நீ முன்னிய வினையே
    நீ கருதிய செயலின் பயனை
  • செரு புகன்று
    போரினை விரும்பி
  • சேண் உயர் நெடுங்கொடி
    மிக உயரமான கம்பத்தின் மீது பறந்துகொண்டிருக்கும் நீண்ட கொடிகள்
  • வரிப்புணை பந்தொடு
    வரிந்து கட்டப்பட்டுள்ள பந்தோடு
  • பாவை
    பொம்மை
  • தூங்க
    தொங்கிய வண்ணமிருக்க
  • பொருநர் தேய்த்த
    போரிடுவோர் இல்லாதவாறு செய்த
  • போர் அருவாயில்
    போரிடும் வாய்ப்பு இல்லாத வாயில்
  • திருமகள் வீற்றிருந்த
    அளவற்ற செல்வம் கொழிக்குமாறு திருமகள் கம்பீரமாக வீற்றிருந்த
  • தீது தீர்
    குற்றம் நீங்கிய
  • நியமம்
    கடைவீதிகள்
  • மாடம் மலி மறுகு
    மாளிகைகளையுடைய வீதிகள்
  • கூடல்
    மதுரை மாநகர்
  • குடவாயின்
    மேற்குத் திசையில்
  • இருஞ்சேறு
    கரிய சேறு
  • அகல் வயல்
    அகலமான நெல் வயல்
  • வாய் அவிழ்ந்த
    தாதும் இதழும் தோன்றுமாறு கட்டவிழ்ந்து மலர்ந்த
  • இரு
    மிக்க
  • முள்தாள் தாமரை
    முள் பொருந்திய தண்டினை உடைய தாமரை மலர்
  • வைகறை
    விடியற் காலையில்
  • கள்கமழ்
    தேன் மணம் கமழ்கின்ற
  • நெய்தல் ஊதி
    நெய்தல் மலர் மீது மொய்த்து ரீங்காரமிட்டு
  • எல்பட
    கதிரவன் தோன்றும் வேளையில்
  • காமரு
    விருப்பத்தைத் தரும்
  • அரி
    அழகு
  • குன்று
    திருப்பரங்குன்றம்
  • அமர்ந்து
    விரும்பி அமர்ந்திருக்கும்
  • உரியன்
    தனக்கு உரிய அருட் செயலாகக்கொண்ட திருமுருகப்பெருமான்

kaumaram.com மற்றும் பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com