அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு.
aRattinUung kAkkamum illai atanaimaRattalin Ungkillai kETu
Meaning in English
No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws
பொருள் / உரை
மு.வரதராசன்
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
பரிமேலழகர்
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை




