உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
uranennun tOTTiyAn Oraintum kAppAnvaranennum vaippiRkOr vittu
Meaning in English
He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains
பொருள் / உரை
மு.வரதராசன்
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்
பரிமேலழகர்
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்




