திருவருட்பா · 74தலைவி தோழிக்கு உரைத்தல்

வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்
மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி
நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி.
1
தொம்பத உருவொடு தத்பத வெளியில்
தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும்
எம்பதமாகி இசைவாயோ தோழி
இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.
2
சின்மய வெளியிடைத் தன்மய மாகித்
திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
என்மய மாகி இருப்பாயோ தோழி
இச்சை மயமாய் இருப்பாயோ தோழி.
3
நவநிலை மேற்பர நாதத் தலத்தே
ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும்
மவுனத் திருவீதி வருவாயோ தோழி
வாராமல் வீண்பழி தருவாயோ தோழி.
4
ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில்
அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்
ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி
ஏறி இழிந்திங் கிறப்பாயோ தோழி.
5
வகார வெளியில் சிகார உருவாய்
மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும்
விகார உலகை வெறுப்பாயோ தோழி
வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி.
6
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு
நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்
சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி
துட்டநெறியில் கெடுவாயோ தோழி.
7
அறிவில் அறிவை அறியும் பொதுவில்
ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்
செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.
8
என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில்
இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும்
நின்னைவிட் டென்னோடே நிலைப்பாயோ தோழி
நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி.
9
துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில்
ஜோதித் திருநடம் நான்காணல் வேண்டும்
கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி
காணாது போய்ப்பழி பூண்பாயோ தோழி.
10
தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில்
சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும்
கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி
குறியா துலகில் வெறிப்பாயோ தோழி.
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com