திருவருட்பா · 38வரம்பில் வியப்பு

பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
புகலரும் பெரியஓர் நிலையில்
இன்புரு வாகி அருளொடும் விளங்கி
இயற்றலே ஆதிஐந் தொழிலும்
தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
அவன்தனை மறுப்பவர் யாரே.
1
மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
மன்னுருத் திரர்களே முதலா
ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
குறுபெருந் தொழில்பல இயற்றி
இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
அவன்தனை மறுப்பவர் யாரே.
2
தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
ஒருதனிப் பெரும்பதி உவந்தே
புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
பொறுத்தருட் பூரண வடிவாய்
என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
எந்தையைத் தடுப்பவர் யாரே.
3
பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
பாலதோ பால்உறா அதுவோ
ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
இயற்கையோ ஆதியின் இயல்போ
மேல்வகை யாதோ எனமறை முடிகள்
விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
வள்ளலைத் தடுப்பவர் யாரே.
4
வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
வருபர உணர்ச்சியும் மாட்டாப்
பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
பராபர உணர்ச்சியும் பற்றா
உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.
5
படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
பரம்பர ஒளிஎலாம் அணுவில்
கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.
6
அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
பேசநின் றோங்கிய பெரியோன்
களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
கருணையா ரமுதளித் துளமாம்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
வள்ளலைத் தடுப்பவர் யாரே.
7
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
உளவுயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
கருத்தெலாம் இனிதுதந் தருளித்
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
தந்தையைத் தடுப்பவர் யாரே.
8
அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
தையகோ ஐயகோ அறிவின்
மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
திருவுளம் தடுப்பவர் யாரே.
9
கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
கொள்கையாய்க் கொள்கையோ டளவா
அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
வண்மையைத் தடுப்பவர் யாரே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com