திருவருட்பா · 113அம்பலவாணர் வருகை

வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
வல்லி மணாளரே வாரீர்
மணிமன்ற வாணரே வாரீர்.
1
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
அம்பல வாணரே வாரீர்
அன்புடை யாளரே வாரீர். வாரீர்
2
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
அந்தண ரேஇங்கு வாரீர்
அம்பலத் தையரே வாரீர். வாரீர்
3
அன்புரு வானவர் இன்புற உள்ளே
அறிவுரு வாயினீர் வாரீர்
அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்
4
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
அரும்பெருஞ் சித்தரே வாரீர்
அற்புத ரேஇங்கு வாரீர். வாரீர்
5
அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
அன்பனு மாயினீர் வாரீர்
அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
6
அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய
அம்பல வாணரே வாரீர்
அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
7
அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்
அன்பருக் கன்பரே வாரீர்
இன்பம் தரஇங்கு வாரீர். வாரீர்
8
அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
அடிக்கம லத்தீரே வாரீர்
நடிக்கவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
9
அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
அளித்திட வல்லீரே வாரீர்
களித்தென்னை ஆண்டீரே வாரீர். வாரீர்
10
அம்பர மானசி தம்பர நாடகம்
ஆடவல் லீர்இங்கு வாரீர்
பாடல்உ வந்தீரே வாரீர். வாரீர்
11
ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
ஆனந்த நாடரே வாரீர். வாரீர்
12
ஆகம வேதம் அனேக முகங்கொண்
டருச்சிக்கும் பாதரே வாரீர்
ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்
13
ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்
ஆரிய ரேஇங்கு வாரீர்
ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
14
ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்
ஆரிய ரேஇங்கு வாரீர்
ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
15
ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
ஆனந்த ரேஇங்கு வாரீர்
ஆடல்வல் லீர்இங்கு வாரீர். வாரீர்
16
ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
தமுதம் அளித்தீரே வாரீர்
ஆடிய பாதரே வாரீர். வாரீர்
17
ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். வாரீர்
18
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
ஜோதிய ரேஇங்கு வாரீர்
வேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்
19
ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
கூடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
20
ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
ஆண்டவ ரேஇங்கு வாரீர்
தாண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
21
ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
ஆணவம் போக்கினீர் வாரீர்
காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
22
இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்
இறையவ ரேஇங்கு வாரீர்
காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
23
இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
இதுதரு ணம்இங்கு வாரீர்
இன்னமு தாயினீர் வாரீர். வாரீர்
24
இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
இருக்கின்ற நாதரே வாரீர்
இருக்கின் பொருளானீர் வாரீர். வாரீர்
25
இரவும் பகலும் இதயத்தி லூறி
இனிக்கும் அமுதரே வாரீர்
இனித்தரி யேன்இங்கு வாரீர். வாரீர்
26
இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று
இதுதரு ணம்இங்கு வாரீர்
இருமையும் ஆயினீர் வாரீர். வாரீர்
27
இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்
கிதுதரு ணம்இங்கு வாரீர்
இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர்
28
இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே
இத்தரு ணம்இங்கு வாரீர்
இதநடஞ் செய்கின்றீர் வாரீர். வாரீர்
29
இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம்
இதுஎன் றளித்தீரே வாரீர்
இதயத் திருந்தீரே வாரீர். வாரீர்
30
இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
எங்கும் நிறைந்தீரே வாரீர்
இந்தெழில் வண்ணரே வாரீர். வாரீர்
31
இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை
ஏறவைத் தீர்இங்கு வாரீர்
இறுதியி லீர்இங்கு வாரீர். வாரீர்
32
ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
கின்பமும் ஆயினீர் வாரீர்
அன்பருக் கன்பரே வாரீர். வாரீர்
33
ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
உதயச் சுடரினீர் வாரீர். வாரீர்
34
ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை
இன்புறச் செய்கின்றீர் வாரீர்
வன்பர்க் கரியீரே வாரீர். வாரீர்
35
ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்
கெட்டா திருந்தீரே வாரீர்
நட்டார்க் கெளியீரே வாரீர். வாரீர்
36
ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
டேசரே நீர்இங்கு வாரீர்
நேசரே நீர்இங்கு வாரீர். வாரீர்
37
ஈசர் பலிக்குழல் நேசர்என் றன்பர்கள்
ஏசநின் றீர்இங்கு வாரீர்
நாசமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
38
ஈறறி யாமறை யோன்என் றறிஞர்
இயம்பநின் றீர்இங்கு வாரீர்
வயந்தரு வீர்இங்கு வாரீர் வாரீர்
39
ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்
கீதல்செய் வீர்இங்கு வாரீர்
ஓதரி யீர்இங்கு வாரீர். வாரீர்
40
ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
றீடணை யீர்இங்கு வாரீர்
ஆடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
41
ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்
ஆண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
42
உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
குள்ள துரைசெய்தீர் வாரீர்
வள்ளல் விரைந்திங்கு வாரீர். வாரீர்
43
உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
என்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
44
உறவும் பகையும் உடைய நடையில்
உறவும்எண் ணேன்இங்கு வாரீர்
பிறவுநண் ணேன்இங்கு வாரீர். வாரீர்
45
உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
உள்ளத் திருந்தீரே வாரீர்
விள்ளற் கரியீரே வாரீர். வாரீர்
46
உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்
உய்யவல் லேன்இங்கு வாரீர்
செய்யவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
47
உடையவ ரார்இக் கடையவ னேனுக்
குடையவ ரேஇங்கு வாரீர்
சடையவ ரே இங்கு வாரீர். வாரீர்
48
உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
உறங்கமாட் டேன்இங்கு வாரீர்
இறங்கமாட் டேன்இங்கு வாரீர். வாரீர்
49
உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
துண்டி விரும்பினேன் வாரீர்
உண்டி தரஇங்கு வாரீர். வாரீர்
50

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits