திருவருட்பா · 111நெஞ்சொடு கிளத்தல்

அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே
தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே
தொடங்குநாள் நல்லதன் றோ.
1
வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
நல்லநாள் எண்ணிய நாள்.
2
காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.
3
ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.
4
தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே
தடையாதும் இல்லைகண் டாய்.
5
கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
பையுள் உனக்கென்னை யோ - நெஞ்சே
பையுள் உனக்கென்னை யோ.
6
என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
உன்னுவ தென்னைகண் டாய்.
7
நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே
ஏன்பற்று வாயென்ப தார்.
8
தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
தத்துவ முன்னுவ தேன்.
9
ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச்சற்றும்
விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
விக்கல் வராதுகண் டாய்.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits