திருவருட்பா · 19காதல் மாட்சி

திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை
மடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து
படனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
1
தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத்
துக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே
பக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
2
தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை
மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து
பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
3
நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண
நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து
பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
4
நாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி தனைக்காண
நீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து
பாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
5
அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண
இழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து
பழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
6
திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்
கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
7
கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை
விடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து
படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
8
தில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர் பவனிதனைக்
கல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி
பல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
ஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
9
மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண
அடையா மகிழ்வி னொடும்வந்தால் அம்மா நமது விடயமெலாம்
படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com