திருவருட்பா · 14திருக்கோலச் சிறப்பு

பொன்னென் றொளிரும் புரிசடையார் புனைநூல் இடையார் புடைஉடையார்
மன்னென் றுலகம் புகழ்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
மின்னென் றிலங்கு மாதரெலாம் வேட்கை அடைய விளங்கிநின்ற(து)
இன்னென் றறியேன் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
1
அள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற வள்ளல் பவனி வரக்கண்டேன்
துள்ளிக் குதித்தென் மனம்அவரைச் சூழ்ந்த தின்னும் வந்ததிலை
எள்ளிக் கணியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
2
அனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார் வடியாத
வனத்துச் சடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
மனத்துக் கடங்கா தாகில்அதை வாய்கொண் டுரைக்க வசமாமோ
இனத்துக் குவப்பாம் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
3
கொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை
வழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
பழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும்
எழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
4
புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார்
மன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
உன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற
என்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
5
சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்
மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
கல்லும் மரமும் ஆனந்தக் கண்ர் கொண்டு கண்டதெனில்
எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
6
நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்றுநறா
ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
யார்க்கும் அடங்கா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
7
கலக அமணக் கைதவரைக் கழுவி லேற்றுங் கழுமலத்தோன்
வலகை குவித்துப் பாடும்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
உலக நிகழ்வைக் காணேன்என் உள்ளம் ஒன்றே அறியுமடி
இலகும் அவர்தந் திருஅழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
8
கண்ணன் அறியாக் கழற்பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள்அருள்
வண்ணம் உடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
நண்ண இமையார் எனஇமையா நாட்டம் அடைந்து நின்றனடி
எண்ண முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
9
மாழை மணித்தோள் எட்டுடையார் மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார்
வாழை வளஞ்சூழ் ஒற்றியூர் வாணர் பவனி வரக்கண்டேன்
யாழை மலைக்கும் மொழிமடவார் யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார்
ஏழை யேன்நான் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com