திருவருட்பா · 1திரு உலாப் பேறு

சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை
ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண்
வாரார் முலைகண் மலைகளென வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
ஏரார் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
1
சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் பைம்பொன் வளைகள் அமைத்திலகாண்
தார்த்தேன் குழலும் சரிந்தனகாண் தானை இடையிற் பிரிந்தனகாண்
ஈர்த்தேன் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
2
சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட
வீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்
போதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன்
ஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
3
தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
4
சீலக் குணத்தோர் புகழ்ஒற்றித் தியாகப் பெருமான் பவனிஇராக்
காலத் தடைந்து கண்டேன்என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
ஞாலத் தவர்கள் அலர்தூற்ற நற்று‘ சிடையில் நழுவிவிழ
ஏலக் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
5
சேயை அருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில்
தூய பவனி வரக்கண்டேன் சூழ்ந்த மகளிர் தமைக்காணேன்
தாயை மறந்தேன் அன்றியும்என் தனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
ஏயென் தோழி என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
6
திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி
அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
7
தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரக்
கூசா தோடிக் கண்டரையில் கூறை இழந்தேன் கைவளைகள்
வீசா நின்றேன் தாயரெலாம் வீட்டுக் கடங்காப் பெண்எனவே
ஏசா நிற்க என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
8
தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத்
தோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சேர்ந்ததுடன்
ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
9
திருமாற் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
பெருமான் மனமு நானும்முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
பொருமா நின்றேன் தாயரெலாம் போஎன் றீர்க்கப் போதுகிலேன்
இருண்மாண் குழலாய் என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com