திருவருட்பா  79. போற்றித் திருப்பதிகம்

அருள்தரல்  வேண்டும்  போற்றிஎன்  அரசே 
அடியனேன்  மனத்தகத்  தெழுந்த 
இருள்கெடல்  வேண்டும்  போற்றிஎந்  தாயே 
ஏழையேன்  நின்றனைப்  பாடும் 
தெருள்உறல்  வேண்டும்  போற்றிஎன்  அறிவே 
சிந்தைநைந்  துலகிடை  மயங்கும் 
மருள்அறல்  வேண்டும்  போற்றிஎன்  குருவே 
மதிநதி  வளர்சடை  மணியே. 
1
மணிமிடற்  றமுதே  போற்றிஎன்  தன்னை 
வாழ்விக்க  வேண்டுவல்  போற்றி 
அணிமதி  முடியோய்  போற்றிஇவ்  வேழைக் 
கருளமு  தருளுக  போற்றி 
பணிஅணி  புயத்தோய்  போற்றிநின்  சீரே 
பாடுதல்  வேண்டும்நான்  போற்றி 
தணிவில்பே  ரொளியே  போற்றிஎன்  தன்னைத் 
தாங்குக  போற்றிநின்  பதமே. 
2
நின்பதம்  பாடல்  வேண்டும்நான்  போற்றி 
நீறுபூத்  தொளிர்குளிர்  நெருப்பே 
நின்புகழ்  கேட்டல்  வேண்டும்நான்  போற்றி 
நெற்றியங்  கண்கொளும்  நிறைவே 
நின்வச  மாதல்  வேண்டும்நான்  போற்றி 
நெடியமால்  புகழ்தனி  நிலையே 
நின்பணி  புரிதல்  வேண்டும்நான்  போற்றி 
நெடுஞ்சடை  முடித்தயா  நிதியே. 
3
நிதிதரு  நிறைவே  போற்றிஎன்  உயிர்க்கோர் 
நெறிதரு  நிமலமே  போற்றி 
மதிமுடிக்  கனியே  போற்றிஎன்  தன்னை 
வாழ்வித்த  வள்ளலே  போற்றி 
விதிமுதற்  கிறையே  போற்றிமெய்ஞ்  ஞான 
வியன்நெறி  விளக்கமே  போற்றி 
பதிபசு  பதியே  போற்றி  நின்பாதம் 
பாடஎற்  கருளுக  போற்றி. 
4
போற்றிஎன்  உயிர்க்கோர்  இன்பமே  அன்பர் 
புரிதவக்  காட்சியே  போற்றி 
போற்றிஎன்  அன்பாம்  தெய்வமே  சைவம் 
புகல்சிவ  போகமே  போற்றி 
போற்றிஎன்  பெரிதாஞ்  செல்வமே  கருணைப் 
பூரண  வெள்ளமே  போற்றி 
போற்றிஎன்  வாழ்வுக்  கொருபெரு  முதலே 
போற்றிநின்  சேவடிப்  போதே. 
5
போதஆ  னந்த  போகமே  என்னைப் 
புறம்பிட  நினைத்திடேல்  போற்றி 
சீதவான்  பிறைசேர்  செஞ்சடை  யாய்என் 
சிறுமைதீர்த்  தருளுக  போற்றி 
பேதம்ஒன்  றில்லா  அருட்கட  லேஎன் 
பிழைஎலாம்  பொறுத்தருள்  போற்றி 
வேதமெய்ப்  பொருளே  போற்றிநின்  அல்லால் 
வேறெனக்  கிலைஅருள்  போற்றி. 
6
போற்றுவார்  உள்ளம்  புகுந்தொளிர்  ஒளியே 
போற்றிநின்  பூம்பதம்  போற்றி 
ஆற்றுவார்  சடைஎன்  அப்பனே  போற்றி 
அமலநின்  அடிமலர்  போற்றி 
ஏற்றுவார்  கொடிகொள்  எந்தையே  போற்றி 
இறைவநின்  இருங்கழல்  போற்றி 
சாற்றுமா  றரிய  பெருமையே  போற்றி 
தலைவநின்  தாட்டுணை  போற்றி. 
7
துணைமுலை  மடந்தை  எம்பெரு  மாட்டி 
துணைவநின்  துணையடி  போற்றி 
புணைஎன  இடரின்  கடலினின்  றேற்றும் 
புனிதநின்  பொன்னடி  போற்றி 
இணையில்பே  ரின்ப  அமுதருள்  கருணை 
இறைவநின்  இணையடி  போற்றி 
கணைஎனக்  கண்ணன்  தனைக்கொளும்  ஒருமுக் 
கண்ணநின்  கழலடி  போற்றி. 
8
அடியனேன்  பிழைகள்  பொறுத்தருள்  போற்றி 
அயல்எனை  விட்டிடேல்  போற்றி 
கொடியனேற்  கின்பந்  தந்தருள்  போற்றி 
குணப்பெருங்  குன்றமே  போற்றி 
நெடியஎன்  துன்பந்  துடைத்தருள்  போற்றி 
நினைஅலால்  பிறிதிலேன்  போற்றி 
படிமிசைப்  பிறர்பால்  செலுத்திடேல்  எங்கள் 
பரமநின்  அடைக்கலம்  நானே. 
9
நான்செயும்  பிழைகள்  பலவும்நீ  பொறுத்து 
நலந்தரல்  வேண்டுவன்  போற்றி 
ஏன்செய்தாய்  என்பார்  இல்லைமற்  றெனக்குன் 
இன்னருள்  நோக்கஞ்செய்  போற்றி 
ஊன்செய்நா  வால்உன்  ஐந்தெழுத்  தெளியேன் 
ஓதநீ  உவந்தருள்  போற்றி 
மான்செயும்  நெடுங்கண்  மலைமகள்  இடங்கொள் 
வள்ளலே  போற்றிநின்  அருளே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com