
திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ்
வரைப டாதுவ ளர்வல்லி கேசநீ
தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ.
சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தை யேவலி தாயத்த லைவநீ
கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ.
வேலை கொண்ட விடம்உண்ட கண்டனே
மாலை கொண்ட வளர்வல்லி கேசனே
பாலை கொண்ட பராபர நீபழஞ்
சேலை கொண்ட திறம்இது என்கொலோ.
பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே
மன்னும் மாமணி யேவல்லி கேசனே
உன்ன நீஇங்கு டுத்திய கந்தையைத்
துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே.
கடுத்த தும்பிய கண்டஅ கண்டனே
மடுத்த நற்புகழ் வாழ்வல்லி கேசநீ
தொடுத்த கந்தையை நீக்கித்து ணிந்தொன்றை
உடுத்து வார்இலை யோஇவ்வு லகிலே.
ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு
மால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ
பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத்
தோல்உ டுப்பது வேமிகத் தூய்மையே.
துன்னும் மாமருந் தேசுட ரேஅருள்
மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே
துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்
என்ன நீர்எமக் கீயும்ப ரிசதே.
மாசில் சோதிம ணிவிளக் கேமறை
வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.
தேரும் நற்றவர் சிந்தைஎ னுந்தலம்
சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர்
பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தினீர்
யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே.
மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே
வல்லி தாயம ருவிய நாதனே
புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினால்
கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே.



