திருவருட்பா  107. நடேசர் கீர்த்தனை

தெண்டனிட்டே  னென்று  சொல்ல  டி  -  சு  வாமிக்குநான் 
தெண்டனிட்டே  னென்று  சொல்ல  டி. 
1
தண்டலை  விளங்குந்  தில்லைத்  தலத்திற்பொன்  னம்பலத்தே 
கண்டவர்  மயங்கவேடங்  கட்டியாடு  கின்றவர்க்கு  தெண்ட 
2
கற்பூர  வாசம்வீசும்  பொற்பாந்தி  ருமுகத்தே 
கனிந்தபுன்  னகையாடக்  கருணைக்க  டைக்கணாட 
அற்பார்பொன்  னம்பலத்தே  ஆனந்தத்  தாண்டவம் 
ஆடிக்கொண்  டேயென்னை  ஆட்டங்கண்  டாருக்கு  தெண்ட 
3
இழிந்தாலு  நம்மையிங்கே  யேற்றுவா  ரென்றடைந்தால் 
ஏற்றுவார்  போலேபின்னு  மிழியவைப்  பாருக்குப் 
பழந்தான்  நழுவிமெல்லப்  பாலில்  விழுந்ததென்னப் 
பசப்பிப்  பசப்பியன்பர்  பண்டம்  பறிப்பவர்க்குதெண்ட 
4
சுட்டதிரு  நீறுபூசித்  தொந்தோமென்  றாடுவார்க்குத் 
தோன்றுதலை  மாலையணி  தோள்விளங்க  வருவார்க்குப் 
பிட்டுக்காசைப்  பட்டுமாறன்  பிரம்படி  பட்டவர்க்குப் 
பிள்ளைக்கறிக்  காசைகொண்ட  கள்ளத்தவ  வேடருக்கு  தெண்ட 
5
வாழ்ந்தாரை  மேன்மேலும்  வாழச்செய்  பவருக்கு 
மாசுபறித்  தவர்கையிற்  காசுபறிக்  கின்றவர்க்குத் 
தாழ்ந்தாரை  யடிக்கடி  தாழக்காண்  பவருக்குத் 
தானாகி  நானாகித்  தனியேநின்  றவருக்குதெண்ட 
6
ஆதியந்த  நடுவில்லா  ஆனந்த  நாடருக்கு 
அண்டருயிர்  காத்தமணி  கண்டசசி  கண்டருக்குச் 
சோதிமய  மாய்விளங்குந்  தூயவடி  வாளருக்குத் 
தொண்டர்குடி  கெடுக்கவே  துஜங்கட்டிக்  கொண்டவர்க்கு  தெண்ட 
7
பாட்டுக்காசைப்  பட்டுமுன்னம்  பரவைதன்  வாயிலிற்போய்ப் 
பண்புரைத்துத்  தூதனென்றே  பட்டங்கட்டிக்  கொண்டவர்க்கு 
வீட்டுக்காசைப்  படுவாரை  வீட்டைவிட்டுத்  துரத்தியே 
வேட்டாண்டி  யாயுலகில்  ஓட்டாண்டி  யாக்குவார்க்கு  தெண்ட 
8
தாய்வறிற்றிற்  பிறவாது  தானே  முளைத்தவர்க்குச் 
சாதிகுல  மறியாது  தாண்டவஞ்செய்  கின்றவர்க்கு 
ஏய  தொழிலருளு  மென்பிராண  நாயகர்க்கு 
ஏமாந்த  வரையெல்லாம்  ஏமாத்து  மீசருக்கு 
9
தெண்டனிட்டே  னென்று  சொல்ல  டி  -  சு  வாமிக்குநான் 
தெண்டனிட்டே  னென்று  சொல்ல  டி. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com