திருவருட்பா  101. கலைமகளார் திருப்பதிகம்

தவளமலர்க்  கமலமிசை  வீற்றிருக்கும்  அம்மனையைச்  சாந்தம்  பூத்த 
குவளைமலர்க்  கண்ணாளைப்  பெண்ணாளும்  பெண்ணமுதைக்  கோதி  லாத 
பவளஇதழ்ப்  பசுங்கொடியை  நான்முகனார்  நாஓங்கும்  பாவை  தன்னைக் 
கவளமத  கயக்கொம்பின்  முலையாளைக்  கலைமாதைக்  கருது  வோமே. 
1
சங்கம்வளர்ந்  திடவளர்ந்த  தமிழ்க்கொடியைச்  சரச்சுவதி  தன்னை  அன்பர் 
துங்கமுறக்  கலைபயிற்றி  உணர்வளிக்கும்  கலைஞானத்  தோகை  தன்னைத் 
திங்கணுதல்  திருவைஅருட்  குருவைமலர்  ஓங்கியபெண்  தெய்வந்  தன்னைத் 
தங்கமலை  முலையாளைக்  கலையாளைத்  தொழுதுபுகழ்  சாற்று  கிற்பாம். 
2
கலைபயின்ற  உளத்தினிக்குங்  கரும்பினைமுக்  கனியைஅருட்  கடலை  ஓங்கும் 
நிலைபயின்ற  முனிவரரும்  தொழுதேத்த  நான்முகனார்  நீண்ட  நாவின் 
தலைபயின்ற  மறைபயின்று  மூவுலகும்  காக்கின்ற  தாயை  வாகைச் 
சிலைபயின்ற  நுதலாளைக்  கலைவாணி  அம்மையைநாம்  சிந்திப்  போமே. 
3

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com